

சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரின் 2 ஆம் நாளான இன்று, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப் பேரவை கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாளை காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
4-ந் தேதி(நாளை) சட்டசபை கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்கும். இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுவார்கள். 5-ந் தேதியன்றும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். மேலும் அன்று சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.