தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - 22, 23 ஆம் தேதிகளில் கேள்வி-பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 24-ஆம் தேதி முதல்வர் பதிலளிப்பார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்து, ஏதாவது ஒரு கட்சியில் கவர்னர் சேர்ந்து விமர்சிக்கலாம். சபாநாயகர் பேசும் போது மற்ற உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.உரையை வாசிக்காமல் ஜனாதிபதி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள முடியுமா? கடமையை செய்யும்படி கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தோம். அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி கவர்னருக்கு அழைப்பு விடுத்தோம்" என்றார்.
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த சட்டசபைக் கூட்டம் அனல் பறக்கும்.. அதேபோல், சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






