மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் சென்னை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்
Published on: 

சென்னை,

மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வை நடத்தத் தொடங்கிய பழமையான மருத்துவக் கல்லூரிகளில் சென்னை மருத்துவக்கல்லூரியும் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வான என்சியெர்ரோ '26 (Encierro '26) இன்று முதல் 11-ம்தேதி வரை சென்னை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 30 மருத்துவக் கல்லூரிகளை சார்ந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, ஹாக்கி, கைப்பந்து, சதுரங்கம், கேரம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க சுமார் 2,000 மருத்துவ மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களுடன், அனைத்து போட்டிகளுக்கான பரிசுத் தொகை மொத்தம் ரூ.2,50,000 மதிப்பில் வழங்கப்பட உள்ளது. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், இன்று விளையாட்டு தீபத்தை ஏற்றி கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்ச்சியான என்சியெர்ரோ '26-ஐ (Encierro '26) தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் அருண்ராஜ் கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து (Volleyball) போட்டியினை தொடங்கி வைத்து, அவர்களுடன் போட்டியில் பங்கேற்று விளையாடினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

நாம் மருத்துவராகப் படித்தாலும், எதிர்காலத்தில் நமது மருத்துவப் பணியிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினாலும், விளையாட்டு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும்போது விளையாட்டு வீரர்களுக்கு என்று ஒரு தனி மரியாதையும், தனி ஈர்ப்பும் இருக்கும்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய வருவாய் பணியை முடித்து, இப்போது அரசியலில் இருக்கிறேன் என்றால், ஏதோ ஒன்றைச் சாதித்திருக்கிறேன் என்றால், அதற்கு எனது சிறு வயதில் இருந்த உடற்கல்வி ஆசிரியர்களும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஏனென்றால், பள்ளியில் படிக்கும்போது கூடைப்பந்து அணியில் இருந்தேன். அடுத்து நான் வேறொரு பள்ளிக்கு மாறும்போது கைப்பந்து அணியில் இருந்தேன். எனது கைப்பந்து பயிற்சியாளர் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எனக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்கள்தான் இன்றளவும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

"பயிற்சிப் போட்டிகளில் விளையாடுபவர்கள் எல்லாம் வீரன் கிடையாது. ஒரு உண்மையான போட்டி ஆட்டத்தில், இறுதிப் போட்டியில், கைப்பந்தாட்டத்தில் எதிரணியினர் வெற்றிப் புள்ளியில் இருக்கும்போது, நீங்கள் சுழியத்தில் இருந்தாலும் கூட, உங்களுடைய மனச்சமநிலையை இழக்காமல் அதே அளவிலான திறனை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்" என்று என் பயிற்சியாளர் சொல்வார்.

நமது வாழ்க்கையில் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். உங்களது தொழில்முறை வாழ்க்கையிலேயே அத்தகைய சூழ்நிலைகள் வரும். ஒரு நோயாளி மிகக் கடுமையான நிலையில் வரும்போது, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வரும்போது, அந்தச் சமயத்திலும் நீங்கள் உங்களது மனச் சமநிலையையும், அமைதியையும் இழக்காமல் சிந்திக்க முடிந்தால் தான், நாம் வெற்றிகரமாக அந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

நீங்கள் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக இல்லாவிட்டாலும் கூட, ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டைக் கண்டிப்பாகக் கற்றுக்கொண்டு, தினமும் விளையாட வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் நீங்கள் தொடர வேண்டும். விளையாட்டு விளையாடுவதால் கிடைக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், தவறான பழக்கவழக்கங்களுக்கு நாம் செல்ல மாட்டோம். ஓய்வு நேரம் கிடைக்கும்போது நண்பர்களுடன் வேறு இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, நாம் விளையாடலாம். எனவே, விளையாட்டு நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் உங்களது தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொள்வதைத் தாண்டி, சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களது வாழ்க்கையைப் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும், விளையாட வேண்டும். இவை அனைத்தும் உங்கள் மன வலிமையையும், மனச் சமநிலையையும் இன்னும் மென்மேலும் செழுமைப்படுத்துவதற்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com