

சென்னை,
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சித் தலைவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது. அருள் விக்னேஷிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உட்பட பல்வேறு மாதர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரே காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.