

சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
மேலும் +2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டம் வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 0.17% அதிகமாக நடப்பாண்டில் 95.20% மாணவ செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காகவும், சிறந்த முறையில் உயர்கல்வி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணை தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது, அரசு பள்ளிகளின் நிலை, தரம் ஆகியவை குறித்து, குறிப்பாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7536 மேல்நிலை பள்ளிகளில் 2639 பள்ளிகள், அதாவது 35% பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
அவற்றில் மொத்தமுள்ள 3,152 தனியார் மேல்நிலை பள்ளிகளில் 1854 பள்ளிகள், அதாவது 58.81% பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,168 அரசு மேல்நிலை பள்ளிகளில் வெறும் 489 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. இது 15.43% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் மிக மோசமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95.20% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் சராசரி அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த அளவை எட்ட முடியவில்லை.
ஈரோடு, சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், நாமக்கல், தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 95-ஐ தாண்டியிருக்கிறது. எட்டு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 90%க்கும் கீழ் சரிந்திருப்பதும், அந்த மாவட்டங்கள் டெல்டா மற்றும் வட தமிழகத்தை சேர்ந்தவை என்பதும் கவலையளிக்க கூடியவை.
அதேபோல், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 10 இடத்தை பிடித்துள்ள விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, மயிலாடுதுறை ஆகியவற்றில் 7 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், மீதமுள்ள 3 மாவட்டங்கள் காவிரி பாசன பகுதிகளையும் சேர்ந்தவையாகும்.
தேர்ச்சி விகிதத்தில் கடைசி 11 முதல் 15 இடங்களை பிடித்திருக்கும் திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகியவற்றில் 3 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், நாகை மாவட்டம் டெல்டாவையும் சேர்ந்தவை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வட தமிழகத்தை சேர்ந்தவை என்பதிலிருந்தே கல்வித்தரத்தில் வட தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை உணர முடியும்.
வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருப்பதில் ஆச்சரியமடையவும், அதிர்ச்சியடையவும் எதுவும் இல்லை. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சுமார் 45 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்கள் பின்தங்கியே தான் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களும் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கத் தொடங்கியுள்ளன.
பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்களும், அண்மைக்காலமாக காவிரி பாசன மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மை காரணம்.
வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மை பாடங்களை நடத்துவதற்கு கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று செல்வது தான் இதற்கு காரணம்.
வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது.
தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழ்நாடு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அவற்றின் கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் மேம்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது அதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.