தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் படிப்புகள் விரைவில் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விரைவில் ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் படிப்புகள் விரைவில் அறிமுகம்
Published on

சென்னை,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்கலைக்கழக நிதிக்குழுவின் 12 பி தகுதியை பெற்று திறந்தநிலை கல்வி முறை மற்றும் தொலை தூர கல்வி வாயிலாக சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலைப்பட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

இதுவரை 10 லட்சத்து 80 ஆயிரத்து 656 பேர் படித்து உள்ளனர். பல்கலைக்கழகங்கள் பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பாட வாரியாக அங்கீகாரம் பெற பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு விண்ணப்பித்து இருந்தோம். 38 படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மற்ற படிப்புகளுக்கு விரைவில் அங்கீகாரம் கிடைத்துவிடும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு 8 மண்டலங்கள் உள்ளன.

ஒரே பாடத்திட்டம்

இந்த வருடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு சேர்ந்துள்ளனர். பட்டய படிப்புகளுக்கு அவ்வாறு அனுமதி பெறத்தேவை இல்லை. அதன் காரணமாக அந்த படிப்புகளையும் நாங்களே நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான திறந்தநிலை மற்றும் தொலை தூரக்கல்விக்கும் ஒரே பாடத்திட்டம் உருவாக் கும் பொறுப்பை அரசு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கி உள்ளது.

ஆன் லைன் மூலம்...

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் மூலம் திறந்த நிலைப்படிப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 படிப்புகளை பயிற்றுவிப்பதற்காக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்த்திரைப்படம், இந்திய எம்பிராய்டரிங், கடல்சார் வணிகம், நன்னீர் கெண்டை மீன் வளர்ப்பு, உள்ளடக்கிய கல்வி, முதியோர் பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு, தமிழ்ப்பண்பாடு ஆகியவை அந்த படிப்புகள் ஆகும். இந்த படிப்புகள் விரைவில் ஆன்லைனில் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com