தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்

இடைத்தேர்தலில் வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் செலவு விலக்கு கோர இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
Published on

சென்னை,

தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் ஆணையம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் ,தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

தலைவர்கள் பட்டியல்

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை 09.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு 16.09.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நட்சத்திர தலைவர்

இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.

தகவல்

இது தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட/ அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, இவ்வலுவலகத்தின் 08.09.2026 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com