

சென்னை,
திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு 15 நாட்கள் மகப்பேறு கால தந்தையர் விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள்ளாகவோ இந்த விடுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவ காலத்தில் தாய்க்கு உடல் மற்றும் உளரீதியான ஆதரவை வழங்குவதற்கும், பச்சிளங் குழந்தையை பராமரிப்பதில் தந்தையின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும், இந்த விடுப்பு பயனுள்ளதாக அமையும். அரசின் இந்த அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
தற்பொழுது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையிலும் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையிலும் பணியாற்றும் ஆண்களுக்கும் மகப்பேறுகால தந்தையர் விடுப்பை வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.