காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று உச்சநீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவை பெற அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு
Published on

சென்னை,

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆய்வு

28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்கு பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே.

சிரமமும் இருக்காது

3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்-அணையில் 23.078 டி.எம்.சி, கபினியில் 18.610 டி.எம்.சி, ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.

விகிதாச்சாரப்படி

இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.

முதல்-அமைச்சர் உத்தரவு

இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று உச்சநீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவை பெற அறிவுறுத்தினார்.

மனு தாக்கல்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com