

சென்னை,
கொளத்தூர் நகைக் கடையில் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்த வழக்கில் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ் சவுத்திரி, பத்தாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 26-ஆம் தேதி அன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவரிடமும் கொள்ளை வழக்கு குறித்து 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி எழும்பூர் 13-வது நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரினர்.
இந்த மனு விசாரணையின் போது, நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொள்ளையன் நாதுராமை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, நாதுராம் தனக்கு ஜாமீன் வழங்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. #Nathuram | #chennai