புதிய பணக் கடன் சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்த தமிழக காவல்துறை

கடன் வசூல் செய்யும்போது சட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய பணக் கடன் சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்த தமிழக காவல்துறை
Published on

சென்னை,

விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை துன்புறுத்தி பணம் வசூலிப்போரிடம் இருந்து பாதுகாக்க, தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025, கடந்த ஆண்டு ஜூன் 9-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் பிரிவு 20-ன்படி, எந்தவொரு கடன் வாங்குபவரும் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய பணக் கடன் சட்டத்தின் கீழ் முதல் வழக்கை தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளது. இது குறித்து டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“புகார்தாரர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.சி.பி. வாகனம் ஒன்றை வாங்குவதற்காக கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாதத் தவணையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13-ந்தேதி, கடன் வசூல் செய்யும் ஏஜென்சியை சேர்ந்த மானேஜர் மற்றும் ஊழியர்கள் புகார்தாரரின் வீட்டிற்கு சென்று, சட்டவிரோதமாக அவரது வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து புகார்தாரர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில், டி.வி.நல்லூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ந்தேதி சம்பந்தப்பட்ட ஏஜென்சி மானேஜரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடன் வசூல் செய்யும்போது சட்ட நடைமுறைகளை கடைபிடிக்க பணக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான அல்லது கட்டாய வசூல் நடைமுறைகளை மேற்கொண்டால், பொதுமக்கள் காவல்துறையினரை அணுகி புகார் அளிக்கலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com