புதுச்சேரி காவல்துறையை பார்த்து தமிழ்நாடு காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆதவ் அர்ஜுனா


தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

புதுச்சேரி,

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அதற்கு அடுத்தபடியாக விஜய் தலைமையில் தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கியூ.ஆர்.கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

“கரூர் சம்பவத்திற்கு பின்னர் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். புதுச்சேரி காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்.தமிழக முதல்-அமைச்சர் புதுச்சேரியை பார்த்து சட்டம் ஒழுங்கை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி காவல்துறையினர் விஜய் பொதுக்கூட்டத்துக்கு மிக சிறந்த அளவில் பாதுகாப்பு அளித்தனர். தமிழ்நாட்டில் கூட இந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுத்தது இல்லை. புதுச்சேரி காவல்துறை பார்த்து தமிழ்நாடு காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்கே முன்னுதாரமாக புதுச்சேரி காவல்துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக புதுச்சேரி முதல்-மந்திரி என்.ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இப்படி ஒரு பாதுகாப்பை தமிழகச் சுற்றுப்பயணங்களின் கிடைத்ததில்லை. தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். அரசை வைத்துக் கொண்டு, காவல்துறையை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்வதை முடக்குவதை முதலில் நிறுத்துங்கள். காற்றை நிறுத்த முடியாது. வெள்ளத்தை நிறுத்த முடியாது. அதுபோலத் தான் தவெகவை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story