வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக போலீசார் அதிரடி

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக போலீசார் அதிரடி
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என்றும், அதை நம்பவேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.

இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், வதந்தி பரப்புவோரை பிடிக்க டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் யார் வதந்தி பரப்புகிறார்கள் என போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூரில் 2 பேர் மற்றும் தூத்துக்குடியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் பணியானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்புவோரின் பட்டியல் தயார்செய்யப்பட்டு வருகிறது என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com