தமிழக அரசியலில் பரபரப்பு; அமைச்சர் ஆனந்த் உடன் சி.வி. சண்முகம், வேலுமணி சந்திப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக அரசியலில் பரபரப்பு; அமைச்சர் ஆனந்த் உடன் சி.வி. சண்முகம், வேலுமணி சந்திப்பு
Published on

சென்னை

தமிழக அமைச்சர் ஆனந்த் உடன், அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி இன்று சந்தித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க. ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சகராக கடந்த மே மாதம் 10-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க அவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

அப்போது, தேர்தலில் 47 இடங்களை வென்றிருந்த அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றோர் அணியும் என 2 ஆக பிரிந்து செயல்பட்டது.

சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

கட்சி பதவி பறிப்பு

த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணியை கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.

இந்த சூழலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க. கொடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் ஏதுமின்றி தனது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

கட்சி பதவியை ஏற்க போவதில்லை

அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, “தேர்தல் முடிந்து அடுத்த 25 நாட்கள் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். என்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் தனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் வீரமணி போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு தமக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே எடப்பாடி பழனிசாமி கொடுத்த துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை. அ.தி.மு.க.வை, தி.மு.க.வுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுகள் எழுந்ததாலேயே உள்கட்சி பூசல் வெடித்தது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவே கட்சியை தொடங்கினார் என்பதால் தி.மு.க.வுடன் சமரசம் ஆவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம், தான் அ.தி.மு.க.விலேயே நீடித்து தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்றும் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய பதவிகள் புறக்கணிப்பு

இதனிடையே, பழனியில் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதிய பதவிகளை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர்.

எஸ்.பி. வேலுமணி கூறுகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரனை சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு

இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உடன் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

இதுபற்றி எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினோம். அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றார். நாங்கள் எப்போதும் அ.தி.மு.க.வினர்தான் என்று கூறினார்.

இதேபோன்று, சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும். அவருக்கும், எனக்கும் என்ன உள்ளது? தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com