அய்யா வைகுண்டரை இழிவாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

, இதே போன்ற தவறு நிகழாதிருப்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
அய்யா வைகுண்டரை இழிவாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவனர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதாரமெடுத்த ஐயா வைகுண்டர் அவர்களைப் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஆங்கிலக் கேள்வியில், "God of hair cutting" என்று இழிவாகக் குறிப்பிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

தென்தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படும் தெய்வீக நிலையை அடைந்தவர் ஐயா வைகுண்டர் அவர்கள். அவருக்கு தாய்-தந்தையர் சூட்டிய பெயர் முத்துக்குட்டி என்பதாகும். ஆனால், மக்கள் அவரை சமத்துவத்தின் நாயகனாக, அவதார புருஷனாக முடிசூட்டி, 'முடிசூடும் பெருமாள்' என்னும் பெயரால் அழைத்தனர்.

எந்த மொழியிலும் பெயரினை அப்படியே எழுதுவதுதான் வழக்கம். அப்படியிருக்கையில், பெயரை மொழிபெயர்த்து சொல்கிறேன் என்று மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் ஐயா வைகுண்டர் திருநாமத்தை இப்படி இழிவு செய்வது முறையா? இதே TNPSC தேர்வில், தன் தந்தையார் குறித்தோ, அல்லது, திமுக தலைவர்கள் குறித்தோ இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்?

  தற்போது நடந்த இத்தவறு மிகவும் கண்டத்திற்குரியது என்றாலும், இதில் எந்தவொரு உள்நோக்கமும் இருக்காது என்று நம்புகிறோம். ஆனாலும், இந்தத் தவறைச் செய்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

மேலும், போற்றத்தக்க மகான்கள், தலைவர்கள் குறித்த கேள்விகள் மற்றும் பதிவுகளில் இன்னும் அதிக விழிப்போடு இருப்பதையும், மீண்டுமொரு முறை, இதே போன்ற தவறு நிகழாதிருப்பதையும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .

X

Daily Thanthi
www.dailythanthi.com