கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க தமிழகத்துக்கு 30 ஆயிரம் டோஸ் ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்க வேண்டும்

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக, தமிழகத்துக்கு 30 ஆயிரம் டோஸ்கள் லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி மருந்துகளை ஒதுக்கவேண்டும் என மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க தமிழகத்துக்கு 30 ஆயிரம் டோஸ் ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்க வேண்டும்
Published on

சென்னை,

கொரோனா தொற்றை எதிர்கொள்ள எங்கள் மாநிலத்துக்கு நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவுக்கு நன்றி. எனது புதிய அரசு கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையை மிகுந்த சிரமத்துக்கும், முயற்சிக்கும் இடையே மிகவும் குறைத்து ஒரு வெற்றியை எட்டியுள்ள இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு மியுகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதும், அவர்களுக்கு லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதும் தற்போது எழுந்துள்ள அவசர சூழ்நிலையாக காணப்படுகிறது.

கருப்பு பூஞ்சை நோய் ஒரு அறிவிக்கப்பட்ட நோயாக இருக்கிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கருப்பு பூஞ்சைக்கான மருத்துவமனைகளையும் அதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வார்டுகளையும் அரசு உருவாக்கி உள்ளது.

673 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அதற்கான லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தின் தேவை மிகவும் அதிகரித்து உள்ளது. 35 ஆயிரம் டோஸ்களை வாங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் தமிழக அரசு ஆர்டர்கள் வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு ஒதுக்கியுள்ள அளவின்படி பார்த்தால் தமிழக அரசு 1,790 டோஸ்களை மட்டுமே பெற்றுள்ளது.

இது இங்கு அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வுக்கு மிகவும் குறைவானதாக உள்ளது. எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி தமிழகத்துக்கு உடனடியாக 30 ஆயிரம் டோஸ்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இது பல்வேறு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் தனிப்பட்ட கவனத்தை இதில் செலுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com