தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே தற்போது நீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், காவிரி நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் வேளாண் துறை மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.

சாகுபடி பணிகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் போதிய மழை இல்லாததாலும், பாசன நீர் ஆதாரங்களான நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும் விவசாயம் பொய்த்து, பயிர்கள் நீரின்றிக் கருகத் தொடங்கியுள்ளன.

காவிரி டெல்டா பகுதியில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலையில், போதிய நீராதாரம் இல்லாததால் நடப்பாண்டில் சுமார் 7 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பணிகள் நடைபெற்றன. ஆனால், தற்போது அந்தப் பயிர்களும் தண்ணீரின்றி வாடத் தொடங்கியுள்ளன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே தற்போது நீர் திறக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள பயிர்களைத் தண்ணீரின்றிப் பாதுகாப்பது விவசாயிகளுக்கு இயலாத காரியமாக உள்ளது.

ஏற்கெனவே குறுவை சாகுபடியில் பெருத்த நஷ்டமடைந்த விவசாயிகள், தற்போதைய சாகுபடிக்காக வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். பயிர்கள் கண்முன்னே கருகுவதால் விவசாயிகள் மீள முடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடனில் ரூ.75,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு, எஞ்சிய தொகையைச் செலுத்த வங்கிகள் நிர்ப்பந்திக்கின்றன. இது விவசாயிகளைப் பேரிடிக்குள் தள்ளும் செயலாகும். மேலும், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு கிடைப்பதிலும் கடும் தாமதம் நிலவுகிறது.

நிவாரணத் தொகை

எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாநிலமாகத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, போர்க்கால அடிப்படையில் பயிர்ச் சேதங்களைக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அத்துடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துப் பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், வறட்சிச் சூழல் நீங்கும் வரை விவசாயிகளிடம் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வங்கிகள் நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும். விவசாயிகளின் நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதோடு, வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். உணவளிக்கும் உழவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X