நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும்: கி.வீரமணி

‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் பிரசார இயக்கத்தை முன்னெடுப்பது என்றும் கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும்: கி.வீரமணி
Published on

நீட் தேர்வு

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த குழுவை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டிருக்கிறது. அதற்கான பதிலை தமிழக அரசு வருகிற 5-ந்தேதி ஐகோர்ட்டில் தெரிவிக்க இருக்கிறது.

அனைத்து கட்சி கூட்டம்

இந்தநிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் அவசர அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கலந்து கொண்டார். இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறவேண்டும் என அனைத்து தலைவர்களும், கல்வியாளர்களும் ஒருமனதாக வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்ததை முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்துக்கு நீட் தேர்வில் நிரந்தரமாக விலக்களிக்கும் வகையில் முடிவெடுத்து பிரதமர் அறிவிக்கவேண்டும். அதேவேளை சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் பிரசார இயக்கத்தை தீவிரமாக நடத்தவேண்டும்.

* நீட் விவகாரத்தில் பா.ஜ.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், சாதாரண, அதற்கும் குறைவான அறிவுடையவர்கள்கூட நீட் தேர்வு இல்லையென்றால் டாக்டர்கள் ஆகிவிட கூடும், என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது மக்களை இழிவுபடுத்துவதாகவும், குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே கல்வி உரியது என மறைமுகமாக குறிப்பிடுவதாகவும் உள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கி.வீரமணி பேட்டி

இந்த கூட்டத்தை தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பா.ஜ.க. தொடுத்திருக்கும் வழக்கு மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். அந்த குழுவை நியமித்ததே தவறு எனும் ரீதியில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கு முறையற்றதும் கூட. இந்த விவகாரத்தில் திட்டமிட்டு அரசியலை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிச்சயம் நல்ல நடவடிக்கையை எடுக்கும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com