மத்திய அரசு ரூ.467 கோடி வழங்காததால் தமிழக மாணவர்கள் பாதிப்பு

தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்திய அரசு ரூ.467 கோடி வழங்காததால் தமிழக மாணவர்கள் பாதிப்பு
Published on

சென்னை,

இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வியை உரிமையாக வழங்குகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்களுக்கான கட்டணத்தை முதலில் மாநில அரசு செலவழிக்கும். பின்னர் மத்திய அரசு அதை வழங்குகிறது.

இந்தநிலையில் தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்காரணமாக தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வில்லை. அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய 25 சதவீத சேர்க்கையை நடத்தவில்லை.

இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நிதி வழங்கவில்லை.

இந்தநிலையில் இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் கேட்ட தொகை எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 202324-ம் ஆண்டுக்கு தமிழக அரசு ரூ.220.33 கோடி கேட்டதில் மத்திய அரசு ரூ.210.92 கோடி அனுமதித்தது. 2024-25-ம் ஆண்டுக்கு தமிழக அரசு ரூ.266 கோடியே 30 லட்சம் கேட்டு இருக்கிறது. அதில் மத்திய அரசு ரூ.256 கோடியே 17 லட்சம் அனுமதி அளித்து விட்டது. ஆனால் இந்த 2 ஆண்டுகளுக்கும் அனுமதி அளித்த மொத்தம் ரூ.467 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

இந்த தொகையை மத்திய அரசு விடுவித்து இருந்தால் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்ந்து இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு தரவில்லை. அதேவேளையில் பல ஆயிரம் கோடிகளுக்கு மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி வரும் தமிழக அரசு இந்த தொகையை ஒதுக்கி இருந்தாலும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து பலன் அடைந்து இருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com