கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.50-க்கு சன்ன ரக அரிசி - விலை உயர்வை சமாளிக்க தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு காரணமாக அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரிசி
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.50-க்கு கீழ் அரிசியை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

அரிசி விலை உயர்வு

தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு காரணமாக அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட சன்ன ரக அரிசி, தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

ஆய்வுக் கூட்டம்

இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் விலை கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக, எந்தெந்த மாநிலங்களில் அரிசி கிடைக்கும், எவ்வளவு அளவு கொள்முதல் செய்ய முடியும் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 1 லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com