

சென்னை,
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 40 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ. 10 திரும்ப கொடுக்கும் நடைமுறையை இன்று முதல் அமல்படுத்த ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 460 டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத இடங்களில் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திக்குமுக்காடினர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடைபெறும். ஆனால், சில இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தால் மது கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதியடைந்தனர்.
அதேவேளை, டாஸ்மாக் கடைகளை திறக்காமல் முன்னறிவிப்பின்றி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு டாஸ்மாக் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக முதற்கட்டமாக 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எஞ்சிய ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஊழியர்களின் இன்றைய திடீர் கடையடைப்பு போராட்டத்தால் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரூ. 150 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பிஎப் உள்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.