தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் நேதாஜி குறித்த வரலாற்று குறிப்புகள் முழுமையாக இல்லை: கவர்னர் ஆர்.என்.ரவி

உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-
நேதாஜியின் தியாகம் அளவிட முடியாதது. அவருடைய தியாகம், உழைப்பு, அனைத்தும் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. நேதாஜியின் படைக்கு முத்துராமலிங்கதேவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார். எண்ணற்ற இளம் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவரும், வீரம் மிக்கவர்கள் உருவாக காரணமானவருமான நேதாஜியை தற்போது யாரும் பெரிதாக பேசுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள பாடப்புத்தகங்களில் கூட நேதாஜி குறித்த வரலாற்று குறிப்புகள் முழுமையாக இல்லை.
இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையை தான் உருவாக்கினார்கள். குறிப்பாக சாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கினார்கள். தற்போது ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அதையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரால் அந்த பதவியில் உரிய மரியாதையுடன் இருக்க முடிவதில்லை. இதுபோன்ற நிலை நாட்டில் மாற வேண்டும் என்று தான் கண்டுகொள்ளப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அறியப்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார்.
நேதாஜியின் ஐ.என்.ஏ. நடத்திய போராட்டங்களால் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்தார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. 2014-ம் ஆண்டிற்கு பிறகு நிலை மாறி உள்ளது. இந்தியர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்கிறார்கள்.
இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2047-ல் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா நிச்சயமாக மாறும். தற்போது இந்தியா உலக அளவில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருந்து வருகிறது. நம் நாட்டிற்கு அனைவரும், குறிப்பாக வளர்ந்து வரும் இளைஞர்கள் அனைவரும் பங்காற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.