காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் முறையீடு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் முறையீடு
Published on

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி நேற்று முன்தினம் முறையிட்டார்.

அப்போது முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெற செய்ய நாளை (திங்கட்கிழமை) மீண்டும் முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நாளை மீண்டும் முறையிட உள்ளனர். இதற்கிடையே மேகதாது அணை கட்ட அனுமதி கோரும் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு கர்நாடக அரசின் சார்பிலும் நாளை முறையிடப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com