தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

தமிழகத்தில் மாவட்டங்களை வரையறுத்து 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்
Published on

நதிகளை பாதுகாக்க திட்டம்

சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆறுகள், ஏரிகளில் மாசற்ற நீராக மாற்றுவது தான் தொலைநோக்கு திட்டம். 5 ஆண்டுகளில் காவிரி, பாலாறு, தாமிரபரணி, காலிங்கராயன் வாய்க்கால், நொய்யல் போன்ற நதிகளை பாதுகாக்க திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான தடை நீடித்து வருகிறது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றை கொண்டு வந்து துணியால் நெய்யப்பட்ட பைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரி உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட்டு மக்களிடம் மாற்றத்தை கொண்டு வரப்படும்.

ஒலிம்பிக் அகாடமி

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்துகளின் அடிப்படையில் அதற்கான நடைமுறைகளை முதல்-அமைச்சர் அறிவிப்பார். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 20 சதவீதம் பேர் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதி என பிரித்து அதனை வரையறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் இடம் குறித்து அறிவிக்கப்படும்.

காவிரி ஆற்றில் கழிவுகள்

மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை காவிரி ஆற்றில் மருத்துவ, உலோக கழிவுகள், சலவை கழிவுகள் கலந்து உயர் உலோகம் கலந்திருப்பதாக ஐ.ஐ.டி. வல்லுனர் குழு ஆய்வறிக்கை தந்துள்ளது. மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் எந்த சாய, மருத்துவ, உலோக கழிவுகள் காவிரி ஆற்றின் நதியில் கலக்காத வகையில் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் இளைஞர்கள் அமைப்பின் கிரிக்கெட் உள்அரங்க மையத்தை தொடங்கி வைத்து கிரிக்கெட் ஆடி அங்கிருந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com