மெரினாவில் தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்


மெரினாவில் தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்
x

மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்திடும் வகையிலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளும், மேற்கொள்ளப்பட்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரையில், மொரினா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இங்கு வரும் மக்களின் மகிழ்விற்காகவும், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், இந்த கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சியில், கலை வளர்மணி பன்னீர் ராஜன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகம், காளை, மயில் ஆட்டங்களும், தீபன் குழுவினரின் பறையாட்டம் கலை நிகழ்ச்சியும், தருமபுரி சிவக்குமார் குழுவினரின் பம்பை, சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சியும், கலப்பை குழுவினரின் களியாட்டம் மற்றும் சாட்டைக்குச்சியாட்டம் கலை நிகழ்ச்சியும், எல்லையில்லா கலைக்குழு நியூட்டன் துடும்பாட்டம் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மாலை 6 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 More update

Next Story