

சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
இந்த நிலையில், சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிவருகிறார். அவர் கூறியதாவது:-
நாட்டுக்கே வழிகாட்டியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் உரிமைத்தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். இன்று மகளிர் மனம் குளிர்ந்து முதல்-அமைச்சரை வாழ்த்துகின்றனர்.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து சமூகநீதிப் பயணத்தை நிகழ்த்தி வருபவர் நமது முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்க முயற்சி செய்த சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது.
நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்க்கட்சிகள் இருக்கிறது. ஆனால், எதிரிகளே கிடையாது. கூட்டாட்சி தத்துவத்தை குலைத்திடும் எந்த முயற்சிகள் தலைநகரில் இருந்து உருவானாலும், அதை எதிர்க்கும் முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகள் ‘அகதிகள்’ என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த சொல்லை மாற்றி, 'இலங்கைத் தமிழர்கள்' என்று தாய்த்தமிழ் உறவை உறுதிசெய்து, அங்கீகாரம் வழங்கியிருக்கிறார் நம் முதல்-அமைச்சர்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, உலகத் தமிழர்களை வழிநடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமை காலத்தின் கட்டாயமாக உள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் போதும்; மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கலாம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பற்றி நாம் அனைவரும் ஒன்றாக வென்றிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.