திராவிட மாடல் ஆட்சி சமூகநீதி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்காக என்றென்றும் போராடும் - தங்கம் தென்னரசு

சமூக நீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி சமூகநீதி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்காக என்றென்றும் போராடும் - தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் பிப்ரவரி 17ஆம் தேதி 2026–2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டம் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் நிறைவேற்றம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘தோழி’ விடுதிகள், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கடைக்கோடி மக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த திராவிட மாடல் ஆட்சி சமூகநீதி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்காக என்றென்றும் போராடும். அதன் ஒரு பகுதியாக, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நாட்டிற்கே முன்னோடியானதாக விளங்குகிறது. சுமார் 1.31 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், பிப்ரவரி–ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டு மகளிருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முயன்றால், தமிழ்நாடே கொந்தளிக்கும். சமூக நீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும். அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை, தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் எனக் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com