தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் -ஜே.பி.நட்டா பேச்சு

பா.ஜனதாவால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் -ஜே.பி.நட்டா பேச்சு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழாவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் தர்மபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி அலுவலகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

வடமாநிலங்களில் வெற்றி

வடமாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகாலயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும்.

தாமரை மலர்ந்தே தீரும்

தமிழகத்தில் பா.ஜனதா தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். பா.ஜ.க.வால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாரிசு அரசியல்

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது.

நான் ஏற்கனவே கூறியது போல், தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான். தற்போது தி.மு.க. குடும்ப அரசியல் என்பதற்கு, முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது.

தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பா.ஜ.க. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பா.ஜ.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

இதையடுத்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் சிறப்புரையாற்றினார். இதில் தமிழக பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com