தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது - உதயநிதி ஸ்டாலின்

உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. இது திராவிட மண். பெரியார் மண். இது சுயமரியாதை மண். அரசியல் எங்களுக்கு இரண்டாவதுதான். மொழி, இன உணர்வுதான் முதன்மையானது. 100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்கத் தயாராக இருக்கிறோம். உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம்.
இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் வேண்டுமானால், நீங்கள் நீட்டும் இடத்தில் கையெழுத்து போடுவார்கள். நிதி வேண்டுமென்றால், எந்த இடத்திலும் கையெழுத்து போடுவார்கள். இது ஒன்றும் அடிமை அரசு அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான தலைவரால் வழிநடத்தப்படுத்துகின்ற சுயமரியாதை உள்ள திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுத்து விடுங்கள்; இல்லை என்றால் எப்படி எடுக்க வேண்டுமென எங்களுக்கு தெரியும்.
மத்திய அரசின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம். மிரட்டலுக்கு அடிபணிவோம் என்று கருதினால் கனவிலும் அது நடக்காது. தமிழ்நாடு ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது. தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. இந்த ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம்தான். விரைவில் தமிழ்நாடு முழுக்க போராட்டமாக மாறும். இந்த ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறாமல் இருப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. அண்ணா பெயரை வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள். எங்களோடு வீதிக்கு வாருங்கள். இது திமுகவுக்கான பிரச்சினை கிடையாது. மாணவர்களுக்கான போராட்டம். தமிழுக்கான போராட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், மத்திய அரசு தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய மந்திரி, பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார் என்றார்.






