

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 சிறப்பு குழுக்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ஆட்சியர்களுக்கு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.
அவர் கூறும்பொழுது, சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற மாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை. அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் பசியாறுகின்றனர்
அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது. கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும் என கூறினார். தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். 58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்த கூடாது என்று அவர் கூறியுள்ளார்.