

சென்னை,
ஒரு வீடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால், அதில் வசிக்கும் குடும்ப தலைவன்-தலைவி ஈட்டும் வருமானம் எவ்வளவோ, அதற்குள் ஒவ்வொரு மாத செலவும், சேமிப்பும் அடங்கிவிட வேண்டும். இந்த வரவு-செலவு கணக்கு ஒவ்வொருவரின் வீட்டுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.
நாடு சுதந்திரம் அடைந்து 1952-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டுக்கே ரூ.22 கோடிக்குத்தான் பட்ஜெட் போட்டது.
காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த 1962-63-ம் ஆண்டில்தான் பட்ஜெட் தொகை ரூ.100 கோடியை தொட்டது. 1967-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த நேரத்தில்கூட ரூ.122 கோடிக்குத்தான் பட்ஜெட் போடப்பட்டது. அதுவரை கடன்கள் எதுவும் வாங்கப்படவில்லை. வருமானம் குறைவு என்றாலும், வரவுக்குள்ளேயே செலவும் செய்யப்பட்டது.
அதன்பிறகு, திமுக - அதிமுக என மாறி.. மாறிவந்த திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில்தான் கடன்கள் வாங்கி குவிக்கப்பட்டது. 1984-85-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தின் கடன் அளவு ரூ.2,129 கோடியாக இருந்தது. அதுவே, 1999-2000-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.18,989 கோடியாக உயர்ந்தது.
2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்தியில் இலவச திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்ததால், கடன் அளவும் அபரிமிதமாக உயரத் தொடங்கியது. 2001-2002-ம் ஆண்டில் கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்த நிலையில், அதிமுக ஆட்சி முடியும்போது, அதாவது 2005-2006-ம் ஆண்டில் ரூ.50,625 கோடியாக அதிகரித்தது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என வழங்கப்பட்டதால், 2006-2011-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து ஆயிரத்து 710 கோடியாக உயர்ந்த கடன் அளவு 2011-2016-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக அதிகரித்தது.
ஆரம்பத்தில் பொருட்களாக வழங்கப்பட்ட இலவச திட்டங்கள், இப்போது மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு ரூ.1000 என நிதி திட்டங்களாக உருமாறி நிற்கிறது. இதனால், கடன் அளவும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த கடன் அளவு 2026-27-ம் ஆண்டில் ரூ.10,62,248 கோடியாக உயரும் என்றும் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2026-27-ம் ஆண்டில் மட்டும் ரூ.1,79,809.65 கோடி
கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 2027 மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தின் கடன் அளவு ரூ.10,71,770.34 கோடியாக இருக்கும்.
1967-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 54 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக இருந்தது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் (2021-2026) அது இரட்டிப்பாகிவிட்டது. வாங்கிய கடன்களுக்கு மட்டுமே வட்டியாக ஆண்டுதோறும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி கட்டப்படுகிறது. இது டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.45 ஆயிரம் கோடியைவிட எவ்வளவு அதிகம் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு வீட்டில் தந்தை கடன் வைத்துவிட்டு சென்றால் அது பிள்ளைகள் தலையில் விழும். அதுபோல் ஒரு அரசு வைக்கும் கடன், அடுத்து வரும் புதிய அரசை பாதிக்கும் என்றாலும், மொத்தத்தில் அது பொதுமக்களைத்தான் வெகுவாக பாதிக்கும். வரி மற்றும் சேவை கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை வரும்.
இனியாவது ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் கடன்களை கட்டுக்குள் வைக்கும் அளவில் திட்டங்களை வகுக்க வேண்டும். பொதுமக்கள் கையில் மீன்களை பிடித்து கொடுக்காமல், அவர்களுக்கு மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள். அதாவது, நிதியை கொடுக்காமல், வேலை என்னும் தூண்டிலை கையில் கொடுங்கள். அதை வைத்து அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள்.