அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - தங்கம் தென்னரசு


அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - தங்கம் தென்னரசு
x

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரை

வணக்கம்.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும், எதிர்வரும் மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு மாநிலங்களின் ஆலோசனைகளைக் கோரியுள்ளதற்காகவும், மத்திய நிதியமைச்சருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டம், நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவதுடன், இந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களின் கருத்துக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.

2. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்தது. எனினும், ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், மத்திய அரசு அளித்த ஒப்புதலின் பலன்கள் முழுமையாக மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் மத்திய அரசு தனது பங்குத் தொகையான 9,500 கோடி ரூபாயை விடுவிப்பதை எதிர்நோக்கி, தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு முன்னதாகவே இத்தொகையை விடுவித்துள்ளது. இத்தொகையானது, மாநில அரசின் கடன்கள் மற்றும் நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாக இடம் பெற்று வருகிறது. இந்தக் கணக்கியல் வேறுபாடு காரணமாக, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் வரம்பும் குறைகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளில் இத்தொகை உரிய வகையில் இடம்பெறும் வகையில், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு ஏற்ப மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் கணக்கியல் பதிவுகளை மத்திய அரசு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்காததற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள், ஏற்கெனவே மற்ற மாநிலங்களில் ஒப்புதல்கள் வழங்கப்பட்ட இதர நகரங்களுடன் ஒப்பிடும் போது முரண்பாடாக அமைந்துள்ளது. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

3. தனது வரி விகிதங்களை அமெரிக்கா உயர்த்தி வருவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31 சதவீதம் அமெரிக்க நாட்டுடன் நடைபெறுவதால், இந்த உயர் வரி விகிதங்கள், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை மிகவும் கடுமையாக பாதித்துள்ளதுடன், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான துறைகளில், ஜவுளித் துறை இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28 சதவீதம் பங்களித்து வருகிறது என்பதாலும், 75 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதாலும், இதனை தேசிய அளவிலான சவாலாகவே கருத வேண்டும்.

இதே நிலைமை தொடர்ந்தால், 30 லட்சம் தொழிலாளர்கள் உடனடியாக வேலை இழப்பைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தையும் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், சமச்சீரான ஏற்றுமதி வாய்ப்புகளை உறுதி செய்திடவும், வட்டி மானியம் உள்ளிட்ட மானியங்கள், ஏற்றுமதி ஊக்கத்தொகை மற்றும் பொருத்தமான வரிச் சலுகை போன்ற அம்சங்கள் அடங்கிய ஜவுளித் துறைக்கான பிரத்தியேக ஆதரவுத் தொகுப்பை அறிவித்திட மத்திய அரசு பரிசீலித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

4. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையின் கீழ் வருவாய் இழப்பு என்பது இங்கு உள்ள அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொண்ட ஒரு முக்கியமான கவலையளிக்கும் பொருளாகும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, கூட்டாட்சி உணர்வுடன், மாநிலங்கள் தங்களது வருவாய் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் தங்கள் தன்னாட்சியை விட்டுக் கொடுக்க ஒப்புக்கொண்டன. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர், மாநிலங்கள் நிதி நெருக்கடியை சமாளித்து வந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் சீரமைப்பு மாநில அரசுகளின் வருவாயை மேலும் பாதித்துள்ளது. இவ்வரி விகித சீரமைப்பினால், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 10,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பினைக் குறைத்திடும் வகையில், இழப்பீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

5. மேலும், எதிர்பார்க்கப்படும் வருவாய் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு, தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரிகள் மீதான மேல் வரி விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே தனது ஆட்சேபணையை எழுப்பியுள்ளது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆட்சேபணை கருத்தில் கொள்ளப்படாத நிலையில், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீதான மத்திய அரசின் ஆயத்தீர்வைகள் உயர்த்தப்படும்போது, அவற்றின் மீதான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு மேல்வரிகள் மூலமாகப் பெறப்படும் வருவாய் உயர்வதால், நுகர்வோர் மீதான வரிச்சுமையில் மாற்றம் ஏதும் ஏற்படாதபோதும், அதன் மூலம் பெறப்படும் கூடுதல் வருவாய் மத்திய அரசிற்கே முழுமையாகச் சென்றடைகிறது. நாட்டின் வருவாயில் மாநிலங்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற அனைத்து மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரிவிகிதங்களுடன் இணைத்திட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

6. ஒருபுறம், சரக்கு மற்றும் சேவை வரி முறையின் கீழ் மாநிலங்கள் தொடர்ந்து வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டண முறையை தொடர்ந்து விதித்து வருவதன் மூலம் மத்திய அரசின் வரிகளில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருகிறது. மறுபுறம், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கான நிதிச் சுமையை மாநில அரசுகள் மீது மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

7. வளர்ந்த பாரதம் - வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் (ஊரகம்) சட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Grameen) Act) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு, உலகளவில் பாராட்டப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தற்போது செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கை, கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கான ஊதிய விகிதங்களில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், புதிய பங்கீட்டு முறை காரணமாக மாநிலங்களின் மீதான நிதிச்சுமை பன்மடங்கு அதிகரிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023-24 ஆம் ஆண்டு அளவிலேயே இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தாலும், மாநில அரசு ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வறுமையை நிர்ணயிப்பதற்கான அளவீடுகள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமானால், இந்தக் கூடுதல் நிதிச்சுமையானது மேலும் அதிகரிக்கும். எனவே, இந்தத் திட்டத்தின் செலவுப் பங்கீட்டு விகிதத்தினையும், மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசினை கேட்டுக்கொள்கிறேன்.

8. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மத்திய அரசின் பங்குத் தொகையான 9,025.68 கோடி ரூபாய் உட்பட, 18,123.05 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், செப்டம்பர் 2024 முதல் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஏதும் விடுவிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள மத்திய அரசின் பங்கான 3,112 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்து, இந்த முக்கியமான பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான புளோரோசிஸ் பிரச்சினைக்குத் தீர்வு காண வடிவமைக்கப்பட்ட முக்கியமானதொரு திட்டமான, ஒகேனக்கல் குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் குறித்து தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

8,428 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டமானது, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவி உள்ளிட்ட, பல்வேறு தரப்புகளிலிருந்து நிதி ஆதாரங்களை எதிர்பார்த்துள்ள நிலையில், மத்திய அரசானது தனது பங்கான 2,283 கோடி ரூபாயை வழங்க மறுத்ததன் காரணமாக, நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியமான இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வரும் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு, இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பான நடைமுறை தாமதங்கள் தடையாக இருக்கக்கூடாது என்பதால், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

9. 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்த தனது பங்குத்தொகையான 3,548 கோடி ரூபாயை இன்றுவரையில் விடுவிக்கவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் செயல்பாட்டிற்கு இந்த நிதி இன்றியமையாதது என்பதுடன், இந்நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் 44 லட்சம் மாணவர்களின் கல்வியையும், 2.4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது. மத்திய அரசு தனது பங்கை விடுவிக்காததால், மாநில அரசு முழு செலவையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்காமல் இந்நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

10. மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள செலவின விகிதங்கள் விலைவாசிக்கு ஏற்ப நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருப்பதால், மாநில அரசுகள் மீதான நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, திட்டத்தின் மொத்தச் செலவினத்தில் மாநில அரசுகள் உயர் விகிதத்தில் தனது பங்காக ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பிரதம மந்திரியின் வீட்டுவசதித் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்களிப்பு, வீடு கட்டுவதற்கான மொத்தச் செலவில் முறையே 30 சதவீதம் மற்றும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.

பெரும்பான்மையான நிதிச்சுமை மாநில அரசுகளின் மீதே விழுகிறது. எனவே, வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களின் கீழ், ஓர் அலகிற்கான செலவின விகிதங்களை மாற்றியமைத்து, மொத்தச் செலவினத்தில் குறைந்தபட்சம் 75 சதவீதம் பங்களிப்பை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

11. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொழிற்பகுதிகளில் புதிய ரெயில் தடங்கள் அமைப்பதற்கான தேவை உள்ளது. எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு பின்வரும் ரெயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

· திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம்

· மதுரை – தூத்துக்குடி – வழி – அருப்புக்கோட்டை இருப்புப்பாதை வழித்தடம் (143.5 கி.மீ)

· மீஞ்சூர் – திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் – சிங்கப்பெருமாள்கோயில் – மதுராந்தகம் இருப்புப்பாதை வழித்தடம்.

· சேலம் – ஓசூர் – பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் – எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை – சேலம் – கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மிதவேக இருப்புப்பாதை வழித்தடம்.

12. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய திட்டங்களில் ஒன்றாக, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான உயர்மட்டச் சாலை (NH-32) மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான சாலை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2005-ஆம் ஆண்டில் சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நான்குவழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது, போக்குவரத்து வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்து, சாலை விபத்துகளால் கடுமையான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட காரணமாக உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு, வரும் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

13. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் மாநிலங்களின் கருத்துகள் நேர்மறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story