

37 வசதிகள்
இதுகுறித்து அமைச்சர் சிவ மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி சுமார் 1,076 கி.மீ. நீளம் கொண்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு இந்தியாவின் 9-வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் கடந்த 21-ந் தேதி வழங்கப்பட்டது. உலகளவில் பாதுகாப்பு மற்றும் துய்மையான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, நீலக்கொடி கடற்கரை (ப்ளு பிளாக் பீச்) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
இதற்கான தூய்மைப் பணிகளை சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டு வருகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு 37 வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள்
பாதுகாப்பான நீச்சல் மண்டலம், உடைமாற்று பகுதி, சாய்ந்திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத்தொட்டிகள், கழிப்பறை மற்றும் 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணல் சுத்தம் செய்யும் எந்திரத்தைப் பயன்படுத்தி கடற்கரை மணல் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது. கடற்கரையின் முக்கிய ஈர்ப்பாக இருப்பது, நீராடும் மண்டலத்தில் பாதுகாப்பாக நீந்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் சக்கர நாற்காலி ஆகும். கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதிவரை என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை மற்றும் நீரோட்ட நிலையைப் பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும்.
முதலுதவி மையம்
பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக 4 கண்காணிப்பு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த அவசர அழைப்பிற்கும் உயிர்காக்கும் காவலர்கள் கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். முதலுதவி மையம் சிபிஆர் உட்பட உடனடி மருத்துவ கவனிப்பு, பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 60 எல்.இ.டி. ஒளிரும் தெரு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கடற்கரை, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
இந்த கடற்கரை, ஒரு பூஜ்ஜிய திரவ கழிவு மேலாண்மை கடற்கரையாகும். இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 40 கிலோவாட் சூரியமின் நிலையம் மற்றும் நாள் ஒன்றுக்கு 50 கிலோ செயலாக்க திறன் கொண்ட தானியங்கி உரம் தயாரிக்கும் எந்திரம் கொண்ட திடக்கழிவு மேலாண்மை அலகு ஆகியவை உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.