

தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. இங்கு ஆங்காங்கே ஈரோடு மாவட்ட ஊராட்சி சார்பில் வரவேற்பு பலகை தமிழில் வைக்கப்பட்டு உள்ளது. சாலையின் ஒரு சில இடங்களில் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி தாளவாடியை அடுத்த ராமபுரம் அருகே இரு மாநில எல்லையில் வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சியின் வரவேற்பு பலகை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாளவாடியை அடுத்த எத்திக்கட்டை கிராமத்தின் அருகே இரு மாநில எல்லையில் மாவட்ட ஊராட்சி சார்பில் சாலையில் வைக்கப்பட்ட வரவேற்பு பலகை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை மீண்டும் உடைத்து எறிந்து கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கர்நாடக போலீசாரும் அங்கு சென்று சேதப்படுத்தப்பட்ட பெயர் பலகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.