காதலிக்கு பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற மதுரை டிரைவர் கைது; மதபோதகர் உடந்தை

காதலியை ஏமாற்றிவிட்டு, சமீபத்தில் சந்திரசேகர் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
காதலிக்கு பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற மதுரை டிரைவர் கைது; மதபோதகர் உடந்தை
Published on

சென்னை:

மதுரையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 26). கார் டிரைவரான இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். தியாகராயநகரில் தங்கி இருந்தார். இவர் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் வசித்த பெண்ணுடன், சந்திரசேகருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் உல்லாசமாக வாழ ஆரம்பித்தனர்.

சந்திரசேகர் தனது காதலியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டியதை நம்பி, சந்திரசேகரின் காதலி, தன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்தார். இதன் விளைவாக காதலி கர்ப்பம் அடைந்தார். காதலியின் கர்ப்பத்தையும் கலைக்கவில்லை. 10 மாதங்கள் கருவை சுமந்த காதலி, சந்திரசேகருக்கு அழகான பெண் குழந்தையை பெற்று கொடுத்தார்.

இதற்கிடையில் காதலுக்கு கிடைத்த பரிசான அந்த பெண் குழந்தையை ஓசை இல்லாமல் ரூ.2 லட்சத்துக்கு ஈரோட்டை சேர்ந்த தம்பதிக்கு விற்று விட்டனர். தற்போது அந்த குழந்தைக்கு 1 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில்தான் பிரச்சினை வெடித்தது. திருமண ஆசை காட்டி குழந்தையை காதலிக்கு பரிசாக கொடுத்த, சந்திரசேகர் திடீரென்று தனது மனநிலையை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.

காதலியை ஏமாற்றிவிட்டு, சமீபத்தில் சந்திரசேகர் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படத்தை, தனது செல்போன் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு இருந்தார்.

இந்த தகவல் தெரிந்து கொதித்து எழுந்த காதலி, சந்திரசேகரிடம் நியாயம் கேட்டார். காதல் வாழ்க்கையை உன்னோடு முடித்துக்கொண்டேன். அடுத்து திருமண வாழ்க்கையை தொடங்கி விட்டேன் என்று அலட்சியமாக பதில் சொன்னார். காதலியை தூக்கி எறிந்து விட்டார், சந்திரசேகர்.

அவரது காதலி உடனே தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம், தனக்கு நியாயம் கேட்டு, புகார் கொடுத்தார். ஆனால் போலீசாரிடம் உரிய நியாயம் கிடைக்காமல், கோர்ட்டுக்கு போனார் காதலி. கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் சந்திரசேகரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் குழந்தையை விற்பனை செய்ய உதவியதாக, நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மதபோதகர் பிரான்சிஸ் (44), ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த பெண் தரகர் தேன்மொழி (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com