அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பிறப்பித்து சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை தொடங்க எந்தத் தடையையும் விதிக்கவில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும்வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com