தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 37). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், ரவிசங்கர் இன்று அஞ்சாலம் கிராமத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரை இடைமறித்து பைக்கில் வந்த 2 பேர் சரமாரியாக தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவி சங்கர் தப்பியோட முயற்சித்தார். ஆனால், அந்த இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரவிசங்கரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தில் நடுரோட்டில் ரவிசங்கர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த ரவி சங்கரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவி சங்கரை வெட்டிக்கொன்ற பருவிதி பகுதியை சேர்ந்த ஆதி, உல்லட்டி கிராமத்தை சேர்ந்த ரக்ஷித் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
தொழிற்போட்டி காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






