கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கர்நாடகாவில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தபால்துறை தேர்வு

பா.ஜ.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தபால்துறை தேர்வு தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும் என்று அறிவித்துள்ள மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி. நியாயமான கருத்துக்கு மத்திய அரசு செவிசாய்த்துள்ளது. ஆனால் ஏதோ தங்களால் தான் வெற்றி கிடைத்துள்ளதாக தி.மு.க. எம்.பி.க்கள் தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள்.

வைகோ குற்றவாளி தான்

இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே குற்றவாளி என்று வைகோ சொல்கிறார். ராஜபக்சே குற்றவாளி என்றால் இனப்படுகொலைக்கு துணை போன காங்கிரசும், அதற்கு உடந்தையாக இருந்த தி.மு.க.வும் குற்றவாளி தான். அவர்களுடன் இணைந்திருக்கும் வைகோவும் குற்றவாளி தான். நாடாளுமன்றத்தின் உள்ளே தார்மீக அடிப்படையில் நுழைய முடியாத குற்றவாளி, வைகோ. இனப்படுகொலையில் காங்கிரசை குற்றம் சாட்டிய வைகோ, இன்று அதே கட்சி தயவுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைய உள்ளார். பதவிக்காக, இலங்கையில் நடந்த படுகொலையை மறக்கலாமா?

உள்ளாட்சி தேர்தலுக்கு கோர்ட்டு மூலம் தடை பெற்றதே தி.மு.க. தான். இன்றைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். வழக்கு சாதகமாக வந்தால் வெற்றி என்பார்கள். தமிழகத்துக்கு தி.மு.க. எதையுமே செய்ததில்லை. எதிர்க் கட்சியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியான கட்சி. ஆளும் கட்சியாக இருப்பதற்கு தகுதியில்லை.

எல்லாவற்றிற்கும் பின்னணியில் தி.மு.க.

அலுவல் மொழியாக சென்னை ஐகோர்ட்டில் மாநில அரசு சட்டம் இயற்றி அதற்கான கோரிக்கை வைத்தால் நிச்சயம் தமிழும் அலுவல் மொழியாக வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாநில மொழிகளுக்கு மரியாதை கொடுத்து பெருமை சேர்க்கும் ஆட்சி, மத்திய பா.ஜ.க. ஆட்சி ஆகும்.

இன்று தனியார் பள்ளிகள் அதிகளவில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. அதுவும் தி.மு.க. வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகம் நடந்திருக்கிறது. எப்படி மதுக்கடை நடத்துவதில் பெரும்பங்கு மது உற்பத்தி ஆலை வைத்திருக்கும் தி.மு.க. வுக்கு இருக்கிறதோ?, அதேபோல அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கும் தி.மு.க.வின் பங்கு உள்ளது. எல்லாவற்றுக்கும் பின்னணியில் தி.மு.க. உள்ளது.

பா.ஜ.க. ஆட்சி

கர்நாடகாவில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி சாத்தியமாகும். ஆனால் எதையும் ஜனநாயக முறைப்படி தான் செய்வோம். ஜனநாயகத்தை மீறியிருந்தால் இதற்கு முன்பே ஆட்சியை பிடித்திருப்போமே. விருப்பப்படி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதில் எப்படி பா.ஜ.க. பின்னணியாக இருக்கமுடியும்? எல்லாவற்றுக்கும் பா.ஜ.க.வை குறைசொல்வது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com