

காஞ்சிபுரம்,
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், குறித்து அவர் கேட்டறிந்தார்.
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவாரசியமாக கலந்துரையாடினார்.
அப்போது அங்குள்ள மக்களிடம், பயிர்க்கடன், ரேசன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? பள்ளிகளுக்கான மேலாண்மை குழு அமைக்கப்பட்டது குறித்து தெரியுமா? போன்ற பல கேள்விகளை கிராம சபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
மேலும், குடிநீர், ரேசன் பிரச்சினைகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல் அமைச்சர், அவர்கள் குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று நடைபெற்று வருகின்றன.இந்த கிராம சபைக் கூட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.