பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐ.ஜி. பணியிடை நீக்கம் ஏன்? அரசு விளக்கம்

பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐ.ஜி. பணியிடை நீக்கம் ஏன்? அரசு விளக்கம்
Published on

புதிய விமான நிலையம்

சென்னையின் புதிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசிடம் இருந்து அதிக இழப்பீட்டு தொகை பெறும் நோக்கத்தில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை கள ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வில் பரந்தூர் கிராமத்தில் பல சர்வே எண்கள் அடங்கிய 73 ஏக்கரில் 1.17 ஏக்கர் நிலம் மட்டும் கிரையம் எழுதி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சர்வே எண்களில் வழிகாட்டி மதிப்பு அதிகபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.11 லட்சத்து 39 ஆயிரம் என உள்ள நிலையில், அந்த ஆவணங்களில் சதுர அடி ரூ.150 என்ற மதிப்பு (ஏக்கர் ரூ.65 லட்சத்து 45 ஆயிரம்) அனுசரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கிரையம் செய்யப்பட்ட 1.17 ஏக்கர் நிலம் எந்த சர்வே எண்களில் கட்டுப்பட்டது என்பதும் குறிப்பிடப்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில்...

புதிதாக விமான நிலையம் அமைக்கும்பட்சத்தில் அதிக இழப்பீட்டு தொகை பெறலாம் என்ற நோக்கத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதாவது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதியன்று எழுதி பதிவு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவின்பேரில், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, சர்ச்சைக்குரிய அந்த ஆவணங்களை பதிவு செய்த பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கு உதவிய ஒரு உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும்போது, இதுபோன்ற அதிக மதிப்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிக அளவிலான இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறானது என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

பகட்டு மதிப்பு ஆவணங்கள்

அரசு திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, இதுபோன்ற அதிக மதிப்புடைய ஆவணங்கள் பகட்டு மதிப்பு ஆவணங்கள் என்று வகைப்படுத்தப்படும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, இழப்பீடு வழங்குவதற்கு அடிப்படை மதிப்பாகவே எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, சந்தை மதிப்பு மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவால் நிர்ணயம் செய்யப்படும்.

பின்னர் அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டு நில நிர்வாக கமிஷனர் தலைமையில் இயங்கும் மாநில அளவிலான குழுவால் சரிபார்க்கப்பட்டு, அரசால் சரியான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, நில உடைமைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு இழப்பீடு வழங்கப்படும்.

இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில், அரசிடம் இருந்து அதிக இழப்பீட்டுத்தொகை பெறும் நோக்கத்தில் ஆவணங்களை பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி.யான சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இது தவறானது ஆகும்.

பணியிடை நீக்கம் ஏன்?

இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் சாமநத்தத்தில் பி.ஏ.சி.எல். கம்பெனிக்கு சொந்தமாக இருந்த 38.26 ஏக்கர் நிலம் சுப்ரீம் கோர்ட்டால் லோதா கமிட்டியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை பதிவு செய்வது குறித்து மதுரை மாவட்டம், மதுரை தெற்கு இணை-1 சார்பதிவாளர் 22.2.2019 அன்று தெளிவுரை கோரியபோது இதுகுறித்து பதிவுத்துறை தலைவரிடம் தெரிவிக்காமலும், ஒப்புதல் பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக நிலங்களை பதிவு செய்ய தடை ஏதும் இல்லை என எழுத்து மூலமாக 5.3.2019 அன்று அனுமதி வழங்கிய காரணத்துக்காக பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் கடந்த 20-ந்தேதியன்று அரசால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com