எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம் - அரசு விளக்கம்

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம் - அரசு விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20-ம் கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறையிடம் கேட்டபோது, அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், அதற்கான முழு பொறுப்பு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அருகில் எங்கு அங்கன்வாடி மையம் உள்ளதோ அங்கு குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை கையாள நியமிக்கப்பட் ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

2013-14க்கு பின், ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com