தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே சூரியன் கோரதாண்டவம் ஆடி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கானல் நீர் தோன்றி மறைகிறது.

அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர். சாலையோரங்களில் உள்ள மரத்தின் அடியிலும், மேம்பாலங்களின் கீழேயும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் இளைப்பாறி செல்கின்றனர். கோடையின் வரவாக பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகள் ஓய்வின்றி இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அப்போது ஈரப்பத காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை விடவும் நெல்லை, தேனி, கோவை மற்றும் வேலூரில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் வெயிலின் அளவு தற்போது இருப்பதை விடவும் 2 டிகிரி செல்சியஸ் குறையும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். \இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com