

சென்னை,
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில், மத்திய அரசு சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கடந்த 12-ந்தேதி வரை சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நல்வாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆலோசனை அமர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் 29 லட்சத்து 88 ஆயிரத்து 110 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்றா நோய்கள் பரிசோதனைக்கான பிரிவில் தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆலோசனை அமர்வுகள் பிரிவில் இதுவரை 85 ஆயிரத்து 514 அமர்வுகள் நடத்தி 3-வது இடத்தையும் பெற்று இரு விருதுகளை தமிழ்நாடு வென்றுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் பெற்றுக் கொண்டனர்.
இதைப்போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வட்டாரத்துக்கு உட்பட்ட அச்சனக்கல் துணை சுகாதார நிலையம், இந்த ஆண்டுக்கான மிக சிறந்த துணை சுகாதார நலவாழ்வு மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான விருதை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அச்சனக்கல் துணை சுகாதார நிலைய களப் பணியாளர்கள் பெற்று கொண்டனர்.