

தாராபுரம்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தவெக சார்பில் சத்யபாமா மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆதரித்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்போது வாக்காளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரத்தில் பேசியுள்ளார்.
இதனால் அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரசாரத்தின்போது ஏற்பட்ட இந்த சின்னக் குழப்பம் தொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.