ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவை சரி செய்யும் பணிகள் துவக்கம்

துத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவை சரி செய்யும் பணி துவங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவை சரி செய்யும் பணிகள் துவக்கம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 28-ந் தேதி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் தேக்கி வைக்கும் பகுதியில் இருந்து ரசாயன பொருட்கள் கொதித்து வெளியேறுவதாக வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன பொருட்கள் கசிவு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று மாலையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டுவாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் என்ஜினீயர் மனோகர், மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் லிவிங்ஸ்டன், தொழிற்சாலைகள் இணை இயக்குனர் சரவணன், துணை இயக்குனர் ரவிகுமார், தாசில்தார் சிவகாமிசுந்தரி, மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் குமரேசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் நேற்று மாலை 4 மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு, கலவர தடுப்பு வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியவற்றுடன் வந்தனர். அவர்கள் ஆலையின் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய கேட் வழியாக ஆலைக்குள் சென்றனர். ஆலையின் ஒரு பகுதியில் அமிலம் உள்பட பல்வேறு பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் 2 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். 6 மணி அளவில் தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு அதிகாரிகள் குழுவினர் வெளியேறினர். பின்னர் இந்த ஆய்வு குறித்த விவரங்களை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் விளக்கி கூறினர்.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஆலையில் பாதுகாப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன பொருட்கள் சேகரித்து வைக்கும் இடத்தில் ஏதேனும் கசிவு உள்ளதா என்று ஆய்வு செய்தோம். 2 மணி நேரம் ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை தந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் மற்றும் பல்வேறு வகையான ரசாயனம் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. இதில் கந்தக அமிலம் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இது உடனடியாக சரிசெய்ய வேண்டிய அளவுக்கு பெரிய பிரச்சினை இல்லை. இருந்தாலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் பாதுகாப்பு துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்பார்வையில் கந்தக அமிலத்தை உடனடியாக அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை (அதாவது இன்று) கந்தக அமிலத்தை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணி ஒரே நாளில் முடிக்கப்படும். இங்கு உள்ள கந்தக அமிலம் எவ்வளவு என்று தெரியவில்லை.

காலையில் அதிகாரிகள் முன்னிலையில் முழுமையாக பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டு கந்தக அமிலம் அப்புறப்படுத்தப்படும். இதனை வெளியே கொண்டு செல்வதற்கு டேங்கர் லாரிகள் ஆலையின் உள்ளே செல்ல வேண்டியது இருக்கும். இதற்கு தேவைப்பட்டால் ஆலையில் வேறு வாசல் திறப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் பயப்பட தேவை இல்லை. ஆலையில் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

சரி செய்யும் பணி துவக்கம்

இந்த நிலையில், இன்று காலை கந்தக அமில கசிவை சரி செய்யும் பணி துவங்கியுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தீ அணைப்பு துறை அதிகாரிகள் தலைமையில், அகற்றும் பணி தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com