கரூர் கூட்ட நெரிசலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவிக்கும் டாஸ்மாக் ஊழியர்: நெஞ்சை உருக்கும் தகவல்

டாஸ்மாக் ஊழியர்-மனைவி இடையேயான செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ஏமூர்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது 35), மகள் தரணிகா(14). இவர்கள் 2 பேரும் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த மேலும் 3 பேரும் இதே சம்பவத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
தனது மனைவியும், மகளும் விஜய் பிரசார கூட்டத்திற்கு சென்று வெகுநேரம் ஆகியும் வராததால், சக்திவேல் தனது மனைவிக்கு செல்போன் மூலம் ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பி உள்ளார். அதில் ‘விஜய் பிரசார கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க. இவ்வளவு நேரம் பாப்பா (மகள்) எப்படி தாங்குவாள்’ என்று கூறி உள்ளார்.
இதற்கு பிரியதர்ஷினி, ‘விஜய் இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் பார்த்துவிட்டு வந்து விடுகிறோம். நீங்க போய் சாப்பிடுங்க மாமா. இங்கு டவர் கிடைப்பதே இல்லை’ என்று பதில் ‘மெசேஜ்’ அனுப்பி உள்ளார். பிரசார கூட்ட நெருக்கடியில் சிக்கி உயிர் இழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த செல்போன் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது கேட்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் தனது அன்பு மனைவியையும், ஆசை மகளையும் இழந்த சோகத்தில் தவித்து வரும் சக்திவேல், தனது இன்னொரு மகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன் இழந்ததால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து தவிப்பது கல்நெஞ்சையும் கரைய செய்வதாக உள்ளது.






