டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி ஊழியர்கள் 17ம் தேதி போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி ஊழியர்கள் 17ம் தேதி போராட்டம்
Published on

சென்னை,

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரையில் அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக 17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டம் குறித்த நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (16-ந்தேதி) இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17 -ந்தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்றும் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 4,749 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 23 ஆயிரம் ஊழியர்கள்

பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும். 14 நாட்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் எங்களை இதுவரையில் அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால் பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காலி பாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் கலந்து கொள்ளுமா என்று அதன் மாநில செயலாளர் சிவகுமாரிடம் கேட்டதற்கு இது பற்றி தலைமையிடம் கேட்டு முடிவு செய்வதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com