டாஸ்மாக் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்பு பேலீசார் மற்றும் பல்வேறு பேலீஸ் நிலையங்களில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் வெங்கடாசலபதி என்பவர் சென்னை ஐகேர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியேர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என சுப்ரீம் கேர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல், வழக்கை முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் தான் இதுசம்பந்தமாக முடிவெடுக்கும். இருப்பினும், அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்க கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாக கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்க 3 வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com