மதுபான பார்களுக்கு அக்.முதல் வாரத்தில் டெண்டர் விட டாஸ்மாக் நிறுவனம் திட்டம்

மதுக்கடைகளில் மதுக்கூடங்கள் நடத்துவதற்கான புதிய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, அடுத்த மாதம் முதல் வாரத்தில் டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோர உள்ளது.
டாஸ்மாக் நிறுவனம்
Published on: 

தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 4,048 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மதுக்கடைகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக தனியாருக்கு ‘பார்’ எனப்படும் மதுக்கூட உரிமம் வழங்கப்படுகிறது.கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான மதுக்கூட ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் காரணமாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்த காலம் முதலில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, புதிதாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம் வழங்குவதற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெண்டர் கோரப்பட உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இதுவரை மதுக்கூடங்களுக்கான டெண்டரில், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என்ற நிபந்தனை இருந்து வந்தது. பல இடங்களில் கட்டட உரிமையாளர்களே மதுக்கூடங்களை நடத்தி வருவதால், புதியவர்களுக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இதன் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நபர்களே மதுக்கூடங்களை நடத்தி வருவதாக தெரிகிறது. இதனால், இந்த முறை விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, இனிமேல் மதுக்கடையை ஒட்டியுள்ள இடத்திலோ அல்லது மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள இடத்திலோ மதுக்கூடம் அமைக்கலாம். இதன் மூலம் புதியவர்களுக்கும் மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம் கிடைக்கும்.

இந்த மாற்றத்தை விரும்பாத சிலர், மதுக்கூடங்களுக்கான டெண்டர் வெளியாவதற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர்களின் விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.டெண்டர் அறிவிப்பு வெளியான பிறகு வழக்கு தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டால், சட்டப்படி அவற்றை விரைவாக எதிர்கொண்டு, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com