டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 பேர் தப்பி ஓட்டம்

வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 பேர் தப்பி ஓட்டம்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் இரணியம்மன் நகரில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு கடந்த 14-ந் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வந்து மதுபானம் அருந்திவிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு மதுபானம் வாங்க ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி கொண்டு திரும்பி சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் இருவரும் உதவி செய்ய வாருங்கள் என்று கூச்சல் போட்டு கடை ஊழியர்களை அழைத்தனர்.

உடனே டாஸ்மாக் கடை மற்றும் பார் ஊழியர்கள் அவர்களை பார்த்தபோது கடந்த 14-ந் தேதி தங்களிடம் தகராறு செய்துவிட்டு சென்ற 2 பேர் என்பது தெரியவந்தது. இதனால் பயந்து போன பார் ஊழியர்கள் கடையின் கதவை சாத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தன் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பார் ஊழியர் முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com